சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி, 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் உள்ள சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக டிஜிபி சத்ய நாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும், டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். மேலும், இதற்கான ஆதாரங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இதைதொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனி குழு அமைத்து, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியது மற்றும் டிஜிபி சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றது குறித்த புகார்களை விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், 'பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, டிஜிபி சத்யநாராயண ராவ், ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என  விசாரணை குழுவினர் தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த அறிக்கையில், 'சத்ய நாராயணராவ், ரூ.2 கோடிபெற்றதற்கான ஆதாரம் இல்லை. கைதியின் பாதுகாப்பு கருதி, சிறை கண்காணிப்பாளருக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு, சசிகலாவுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை' என, குறிப்பிடப்பட்டுள்ளதாக, கன்னட தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது.