The savings account is no longer enough

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்க பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.) திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரூ.1,772

குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காதவர்களிடம் இருந்து கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை ரூ.1,772 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் நிலவியது. இதனால் இந்த முடிவை எஸ்.பி.ஐ. வங்கி எடுக்க உள்ளது.

ரூ. 3 ஆயிரம்

தற்போது பெருநகரங்களில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் ரூ. 2 ஆயிரம், கிராமங்களில் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நீக்கி ஒட்டுமொத்தமாக ரூ. ஆயிரமாக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு ஒருமுறை

இது குறித்து எஸ்.பி.ஐ. வங்கி வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், “ வாடிக்கையாளர்கள் வைத்து இருக்கும் சேமிப்பு கணக்கில் மாத குறைந்த பட்ச இருப்பு தொகையை ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ. ஆயிரமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், திட்டவட்டமான முடிவு ஏதும் எடுக்கவில்லை. அதேபோல, மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பு தொகை கணக்கிடுவதற்கு பதிலாக, 3 மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச இருப்பு தொகையை கணக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கின்றன.

ஜூனில் மாற்றம்

கடந்த ஜூன் மாதத்தில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.5 ஆயிரமாக இருந்தது. அதன்பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பையடுத்து, அது ரூ. 3 ஆயிரமாக குறைக்கப்பட்டது. மேலும், சிறுவர், சிறுமிகள், ஓய்வூதியதாரர்கள், முதியோர்கள், அரசின் மானியம் பெறுவோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை எனவும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்தது.

இது அதிகம்

எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்பு ரூ. 3 ஆயிரம் என்பது, அரசு வங்கிகளிலேயே மிகவும் அதிகமாகும். அதே சமயம், தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., கோடக், ஆக்சிஸ்வங்கிகளைக் காட்டிலும் இது குறைவாகும். அந்த வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு ரூ.10 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவலின்படி, எஸ்.பி.ஐ. வங்கியில், சாதாரண சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் 3.89 கோடி வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் ரூ.235 கோடி அபராதமாக ஏப்ரல் மாதம் வசூலிக்கப்பட்டுள்ளது.