தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவரை மரத்தில் கட்டி வைத்து, ஐந்தாறு பேர் தாக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. முக்கிய குற்றவாளியான ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், டியோரியா என்ற இடத்தில் சாம்சாத் நசீர் என்ற இளைஞர் ஒருவரை சிலர் கண்மூடித்தனமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டார். தான் அணிந்திருந்த சட்டையால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு, குச்சிகளாலும், பெல்ட்டாலும், அவர்கள் அந்த இளைஞரை தாக்கினர். 

வலி தாங்க முடியாமல் நசீர், அலறி அழுதபோதும், அதை பொருட்படுத்தாமல் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கி வந்தனர். நசீர் தாக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. இது குறித்து பலர் கண்டனக்குரல் எழுப்பிய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வீடியோ எடுக்கப்பட்டது உத்தரபிரதேச மாநிலம் டியோரியா என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வீடியோவில் கண்மூடித்தனமாக தமாக்கப்படும் நசீரைக் கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நசீர் கூறிய தகவலைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்காகத்தான் அவர்கள் தன்னை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியதாக நசீர் கூறியுள்ளார். இந்த நிலையில், நசீரைத் தாக்கியவர்களில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.