இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது.

மேலும் குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா சார்பில் திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இருப்பினும் இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தற்காலிகமானது என பாகிஸ்தான் அறிவித்தது.

இந்நிலையில் குல்பூஷன் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்குக்கும், ராணுவ நீதிமன்றத்திற்கும் கருணை மனு ஒன்றை அனுப்பினார்.  

ஆனால் குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவித் பஜ்வாவுக்கு அனுப்பப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவின் கருணை மனு பரிசீலிக்கப்படுகிறது.

உரிய முறையில் ஆதாரங்களை ஆய்வு செய்து கருணை மனு மீது ராணுவத் தளபதி முடிவெடுப்பார் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.