இந்திய எல்லையில் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 4-வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எல்லையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது-

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது இது தொடர்ந்து 4-வது நாளாகும். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

போர் ஒப்பந்த விதிகளையும் மீறி கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தி்ய தாக்குதலில் பவன் சிங் சுக்ரா என்கிற இளைஞர் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டைவிட பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் 228 முறை அத்துமீறி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி வரை மட்டும் 285 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் படையினர் தாக்கியதில் 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். ஜூலை மாதத்தி்ல் நடத்திய தாக்குதலில் 9 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் அப்பாவி மக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

மே மாதத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 79 முறை அத்துமீறி தாக்கியுள்ளனர்.

இவ்வாறு பாகிஸ்தான் படையினரின் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.