காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்பிஎப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டு இருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. 

அப்போது, ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினான். உடனே, அந்த வாகனம் பயங்கரமாக வெடித்தது. இதில், பேருந்தும் வெடித்து சிதறி சின்னா பின்னமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில், பேருந்தில் இருந்து வீரர்கள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகி விழுந்தனர். பலர் படுகாயங்களுடன் அலறி துடித்தனர். பல வீரர்களின் உடல் பாகங்களும், பேருந்தின் பாகங்களும் பல அடி தூரத்துக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு கிடந்தன.

இந்த சம்பவத்தில் 50 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல் முறையாக இதுபோன்ற கொடூர தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களின் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.