பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாக்கும் வகையில் விண்ணப்பிக்கும் போது பிறப்புச்சான்றிதழ் கொடுப்பது கட்டாயம் என்ற முறையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

அதற்கு பதிலாக ஆதார், பான் கார்டு, பள்ளியின் டி.சி. உள்ளிட்ட  பல்வேறு ஆவணங்களின் நகலை இணைக்கலாம் என நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட்விதிமுறைகள் 1980ம் ஆண்டு சட்டத்தின்படி, கடந்த 1989ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதிக்கு பின் பிறந்தவர்கள் கண்டிப்பாக, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்புச்சான்றிதழை இணைக்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகள், தங்களின் பிறப்பு தேதி குறித்து, தங்களின் ஆதரவு இல்லத்தில் இருந்து பிறப்புச்சான்றிதழை அளிக்க வேண்டும் என விதிமுறை இருந்தது. அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய ஆவணங்கள், அல்லது தாங்கள் பணியாற்றியதற்கான ஆவணம் ஆகியவற்றை அளிக்கலாம் என்று இருந்தது. இந்த முறையை மாற்றியுள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிமுறையின்படி, இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், பிறப்புச்சான்றிதழை இணைப்பது கட்டாயமில்லை. அதற்கு பதிலாக ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றுடன் பள்ளியின் டி.சி. மெட்ரிகுலேஷன்சான்றிதழ், கடைசியாக பள்ளி முடித்த சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி. பாலிசி, ஆகியவற்றை பிறப்புச்சான்றிதழுக்கு பதிலான ஆவணமாக பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் ஆனவர்கள், மனைவியை அழைத்து வௌிநாடுசெல்லும்போது, திருமணச் சான்றிதழை கொடுக்கத் தேவையில்லை, ஒருவேளை, மனைவியிடம் விவாகரத்து  பெற்று  இருந்தால், அல்லது தனியாக வாழ்ந்து வந்தால், அவர்கள் தங்களின் மனைவியின் பெயரை குறிப்பிடத் தேவையில்லை.

ஆன்-லைன் மூலம் இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தாய், அல்லது தந்தையின் பெயர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆகியோரின் பெயரை குறிப்பிடத் தேவையில்லை. இதன் மூலம் கணவன் இல்லாமலோ அல்லது மனைவி இல்லாமல் வாழ்பவர்களின் குழந்தைகள் எளிதாகபாஸ்போர்ட் பெற முடியும். மேலும், துறவிகளின் கோரிக்கையையும் ஏற்று, அவர்கள் தங்களின்  பாஸ்போர்ட்டில் தங்களின் குருவின் பெயரையைகுறிப்பிடலாம். மேலும், பான்கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றையும் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.