கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா போக்குவரத்து துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அப்பதவிக்கு புதிதாக ரேவண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். 
மேலும் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் ரூபா சிறைத்துறை டிஐஜிக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து மீடியாக்களுக்கும் பேட்டியளித்திருந்தார்.
இதனிடையில் டிஐஜி ரூபா கொடுத்துள்ள அறிக்கைகள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் இது போன்ற சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் தெரிவித்திருந்தார்.
இது குறித்து லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது குறித்தும் டிஐஜி ரூபாவின் அறிக்கை குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் சீதாராமையா உத்தரவிட்டார். இதற்காக தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்று திடீரென டிஐஜி ரூபா நிருபர்களை சந்தித்தார். அப்போது சசிக்கலாவிற்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் சசிக்கலா விஷயத்தில் என்மீதும் நான் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்தும் தவறு இருந்தால் விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.
இதனால் சிறைத்துறையில் இருந்த டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.என் மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து டிஜி, டிஐஜியை தொடர்ந்து தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆர்.அனிதா தலைமை காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். 
ரூபாவின் சிறைத்துறை டிஐஜியாக ரேவண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மேலும் அனிதாவும் முறைகேட்டில் தொடர்புள்ளதாக செய்திகள் வெளியானதால் தலைமை காவல் கண்காணிப்பாளராக ரேவண்ணாவே கூடுதல் பொறுப்பை கவணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.