Asianet News TamilAsianet News Tamil

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு - சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன்

The Bombay High Court has granted bail to Shatri Prakya in the Malegaon bomb blast case.
the bombay-high-court-has-granted-bail-to-shatri-prakya
Author
First Published Apr 25, 2017, 9:07 PM IST


மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யாவிற்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி, ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த இரட்டை வெடி குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) விசாரித்தது.

இது தொடர்பாக, `அபினவ் பாரதி' என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பை சேர்ந்த முன்னாள் ராணுவ லெப்டினண்ட் கர்னல் பிரசாத் புரோகித், சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் முதன் முதலாக குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றனர்.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தது.

குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாத்விக்கு சொந்தமானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. அடுத்தடுத்த பல்வேறு திருப்பங்களை இந்த வழக்கு கண்டு வந்த நிலையில், சாத்வி பிரக்யா உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு அமைப்பு கைவிட்டது.

இருப்பினும், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சாத்வி பிரக்யா மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

குற்றச்சாட்டு கைவிடப்பட்டதை அடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி சாத்வி பிரக்யா விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டை கைவிட்டது குறித்து கேள்வியும் எழுப்பியது.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சாத்வி பிரக்யா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் இப்போது சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனினும் லெப்டினட் கர்னல் பிரசாத் புராகித்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

ரூ.5 லட்சம் பிணைத் தொகையாக செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், பாஸ்போர்ட்டை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்குமாறும், சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கக் கூடாது எனவும் சாத்வி பிரக்யாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவரை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios