கருப்புபணத்தையும், ஊழலையும் ஒழிக்க மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை என்பது பேரழிவு நடவடிக்கை, தேசவிரோதமானது. இதற்கு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புகேட்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகள், ஊழலை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இதன்படி, நாட்டில் ரூ.15.50 லட்சம் கோடி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. அந்த செல்லாத நோட்டுகளை வங்கி, தபால் நிலையத்தில் கொடுத்து, புதிய ரூ.2000 நோட்டு, ரூ.500 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த காலகட்டத்தில் பணத்தை மாற்றிக்கொள்ள வங்கியின் வாசலில் நின்ற வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

பதில் கூறவில்லை

இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக வங்கிக்கு வந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பை நேற்றுமுன்தினம் வௌியிட்டது. அதில்,  1.4 சதவீதம் ரூ. ஆயிரம் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு வரவில்லை. 98.6 சதவீதம் நோட்டுகள் வந்துவிட்டதாகக் கூறியது. இதன் மூலம், கருப்புபணம் ஒழிப்பு என்பது வெறும் ரூ.8,900 கோடிதான் என்று தெரியவந்தது.

இந்த அறிக்கைக்கு பின் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.

வெட்கமாக இருக்கிறது

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

99 சதவீத செல்லாத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து இருக்கிறது. சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால், ரூபாய் நோட்டு தடை என்பது, கருப்பு பணத்தை வௌ்ளையாக மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டதா?. இந்த நடவடிக்கைக்கு பின்னால் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்களும் இருந்திருக்கிறார்கள். இதில் ரிசர்வ் வங்கி ரூ.16 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியதாக கூறுகிறார்கள். ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்த வகையில் ரூ.21 ஆயிரம் கோடி செலவாகி இருக்கிறது. ஒரு சதவீத கருப்பு பணத்தை ஒழிக்கவா?, பொருளாதார வல்லுநர்கள் ரூபாய்நோட்டு தடையை பரிந்துரைத்தார்கள் வெட்கமாக இருக்கிறது’’ என்றார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது-

ரூபாய் நோட்டு தடையின் மூலம், எந்தவிதமான குறிக்கோளும் நிறைவேற்றப்படவில்லை.  மோசமான சிந்தனையின் முடிவுதான் இது. இதன் மூலம் நாட்டில் பண அராஜகத்தை மத்தியஅரசு நிகழ்த்தி இருக்கிறது. 10 லட்சத்துக்கும்மேற்பட்ட மக்கள் வேலை இழந்துள்ளனர். குடும்ப பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்,  ஏழை மக்கள் அனைவரும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர். கருப்புபணம் எங்கே இருக்கிறது என்று பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “ மோடியின் தௌிவற்ற மனநிலையை மீண்டும் வௌிக்காட்டி உள்ளது.  ரூபாய் நோட்டு தடை என்பது பேரழிவு நடவடிக்கை. இதற்கு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். ரூபாய் நோட்டு தடை என்பது மிகப்பெரிய ஊழல். ரிசர்வ் வங்கியின் தனித்தன்மையும் போய்விட்டது, நாட்டின் நம்பகத்தன்மையும் வௌிநாடுகளில்இழந்துவிட்டது.

சுதந்திரதினத்தின் போது, பேசிய பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு தடைக்குபின், ரூ.3 லட்சம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். ஆனால், ரிசர்வ்வங்கியின் புள்ளிவிவரமோ, ரூ.16 ஆயிரம் கோடி கருப்புபணம் என்கிறது’’ எனத் தெரிவித்தார்.

தேசவிரோத செயல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிடுவிட்டரில் கூறியதாவது-

99.9 சதவீத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துவிட்டன. 100-க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று பலியாகி இருக்கிறார்கள்.ஏழைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாம் எதற்காக? வாழ்வாதாரமும், வாழ்க்கையும் இழந்துள்ளனர். மக்கள் வேலை இழந்துள்ளனர். இதுபோன்ற தேச விரோத செயலுக்கு மோடியை நாடு மன்னிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மிகப்பெரிய ஊழல்

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேஸ்புக்கில் வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

ரூபாய் நோட்டு தடை என்பது ஒட்டுமொத்த தோல்வி அடைந்த திட்டம். 99 சதவீத நோட்டுகள் ரிசர்வ்  வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது. ஒரு சதவீதம் நோட்டுகள் மட்டுமே திரும்பிவரவில்லை. ரூபாய் நோட்டு தடை மிகப்பெரிய ஊழல் நடவடிக்கை. இதற்கு பின்புலத்தில் மறைமுகத்திட்டம் இருக்கிறது. இதன் மூலம் நாடு 3 லட்சம் கோடியை இழந்துள்ளது, நூற்றுக்கணக்காண மக்களை பலி கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.