சபரி மலையில் மாலை நடை திறக்கப்படுவதை அடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 10 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்களிடம் கோயிலின் நம்பிக்கை குறித்து எடுத்துக் கூறி பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். தரிசனம் செய்ய வந்த பெண்கள் 50 வயதுக்கும் குறைவாக இருந்ததால் கேரள போலீஸார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அமைச்சர் தெரிவித்து இருந்தார். சபரிமலை கோயிலுக்கு செல்ல 133 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள நிலையில், அது குறித்து பேசிய கேரள அரசின் தேவசம்போர்டு அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன், சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும், அதுவரை கோயிலுக்குள் பெண்கள் வருவதை அரசு ஆதரிக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

தடையை மீறி வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்தார். அதேநேரம் நீதிமன்ற அனுமதி பெற்ற பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். சபரிமலையில் 15000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.