முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக, திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரியில் இருந்து புனித நீரை, முன்னாள் எம்பி தருண்விஜய் கொண்டு வந்து கொடுத்தார்.

முலமைச்சர் ஜெயலலிதாவை, தனி வார்டுக்கு மாற்றம் செய்யஉள்ளனர். இதுபற்றி டாக்டர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும், உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைவருமான தருண் விஜய், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் காஞ்சி காடக முத்தரையன் உள்பட பலர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று சென்றனர்.

தருண் விஜய், மானசரோவர் ஏரியில் உள்ள புனித நீர் மற்றும் கேதர்நாத் கோவிலில் சிறப்பு பூஜை செய்த ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பிரசாதத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் கொடுத்தார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அறைக்கு அழைத்து சென்று, அவருக்கு அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள் தருண் விஜயிடம் விளக்கி கூறினர். சுமார் 40 நிமிடங்கள் தருண் விஜய் ஆஸ்பத்திரியில் இருந்தார். பின்னர், தருண் விஜய் செய்தியாளர்களிடம்களிடம் கூறியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரை கொண்டு வந்தேன். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து அந்த புனித நீரை கொடுத்தேன்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல்நலம் பெற்றுள்ளார்’’ என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் சந்தித்து பேசினேன்.
அவர்களும் ஜெயலலிதாவின் உடல்நலம் தேறி உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாட்களில் தனி வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தெரிவித்தனர். மேலும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி தன்னுடைய அன்றாட அலுவலக பணிகளை தொடங்குவார் என்றும் தெரிவித்தனர். அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையும் நிறைவேறி இருக்கிறது.

திருவள்ளுவர் கங்கை பயணத்துக்கு சிறப்பான உதவி அளித்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உத்தரகாண்ட் மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆகையால் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கை உள்ளது. கேதர்நாத் கோவிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நன்றி தெரிவிக்கும் பூஜையில் ஜெயலலிதாவை அழைக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.