பிரபல  தெலுங்கு தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி நேற்று இரவு தனது வீட்டின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், பக்தி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருந்தவர் ராதிகா ரெட்டி. இவர் நேற்று இரவு 9 மணி புல்லட்டின் செய்தியை வழங்கிவிட்டு வழக்கம் போல் ஹைதிராபாத், மூசாபெட்டில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

தனது கைப்பையை வீட்டிற்குள் வைத்துவிட்டு விறுவிறு என 5 ஆவது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராதிகா ரெட்டி சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது கைப்பையை சோதனையிட்டபோது அதில் ஒரு கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் மிகுந்த மன அழுத்தம் காரணமாவே தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது மனமே தனக்கு எதிரி என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்றும் ராதிகா அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் ராதிகா ரெட்டி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். அவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். அந்த மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மனம் உடைந்து போயிருந்ததாகவும் கூறப்படுகிறது.