காதல் மனைவியை கொலை செய்ய பட்டா கத்தியுடன் காத்திருந்த கணவரை போலீசார் அதிரடியா கைது செய்துள்ளனர். 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பன்லகுடாவில் வசித்து வரும் சுவர்ணாவும். ராஜேந்திரன் நகரைச் சேர்ந்த சாய் கிரண் என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர், சுவர்ணாவின் தாய் வீட்டுக்கு சென்று இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாய் கிரண் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த அவர், தனது மனைவிக்கு கொலை செய்ய திட்டமிட்டார். இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் சுவர்ணா தப்பித்துவிட்டார். 

இந்நிலையில் இன்று காலை மது அருந்திய சாய்கிரண் சுவர்ணாவிற்கு போன் செய்து ”உன்னை இன்று கொலை செய்வேன்” என்று மிரட்டல் விடுத்தார். மேலும், சுவர்ணாவின் வீட்டின் அருகே கொலை செய்வதற்காக கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு சாய்கிரண் அங்கு முகாமிட்டிருந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாய் கிரணைப் பிடித்து சோதனை செய்த போது, டீ சர்ட்டுக்குள் கத்தியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.