தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மக்கள் பணத்தை கோயிலுக்கு தாராளமாக செலவு செய்து, காணிக்கை செலுத்தி வருகிறார். சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு ரூ.5.6 கோடியில் 19 கிலோதங்க நகைகளை வழங்கிய நிலையில், நேற்று குரவி வீரபத்திர சாமி கோயிலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் ‘தங்க மீசை’ காணிக்கை செலுத்தினார்.

மாநிலப்பிரிவினை

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டால் மகபுபாபாத் மாவட்டம் குராவி அருகே உள்ள வீரபத்ரசுவாமி கோயிலுக்கு தங்க மீசையை காணிக்கையாக செலுத்துவதாக சந்திரசேகர் ராவ் வேண்டியிருந்தார்.

காணிக்கை

அதன்படி, முதல்வரானபின், நேற்று அந்த கோயிலுக்கு சென்ற சந்திரசேகர் ராவ் ரூ. 60 ஆயிரம் மதிப்பில் தங்கத்தில் செய்யப்பட்ட மீசையை காணிக்கையாக வழங்கினார்.

மக்கள் பணம்

கடந்த இரு நாட்களுக்கு முன் திருப்பதி கோயிலிலும் ரூ.5.6 கோடி செலவில் 19 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக செலுத்திய முதல்வர் சந்திர சேகர் ராவ், இப்போது தங்க மீசையை வழங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன், வாரங்கல் நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு ரூ.3.9 கோடி மதிப்பில் 12 கிலோ தங்க நகைகளை சந்திரசேகர் ராவ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்

மக்களின் வரிப்பணத்தை முதல்வர் சந்திரசேகர் ராவ் தேவையில்லாமல் செலவு செய்வு சட்டவிரோதம், அவரின் சொந்த பணத்தில் கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் சந்திரசேகர் ராவின் ஆன்மீகப் பயணம் தொடர்ந்து வருகிறது.