கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த டீ கடை நடத்தும் இளைஞர் ஒருவர், 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து, அரை மணி நேரம் இன்ட்ர்நெட் பயண்பாட்டை இலவசமாக அளித்து வருகிறார். இவரின் நூதனமான விற்பனை யுத்தியால் டீ விற்பனை 4 மடங்கு அதிகரித்துள்ளது
அது குறித்து ருசிகர விவரம் பின்வருமாறு...
பெல்லாரி மாவட்டம், சிறுகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சயத் காதர் பாட்ஷா(வயது23). இவர்தான் இந்த வித்தியாசமான டீ கடை நடத்த திட்டமிட்டவர். கடந்த செப்டம்பரில் தனது கிராமத்தில் டீ கடை தொடங்கும் போது, நாள் ஒன்றுக்கு 100 டீ மட்டுமே விற்பனையான நிலையில், இலவச ‘இன்டர்நெட்’ திட்டத்தைக் கொண்டுவந்த பின், நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 டீ விற்பனையாகிறது.
இது குறித்து சயத் காதர் பாட்ஷா கூறுகையில், “ என்னுடைய கிராமத்தில் முதன்முதலில் டீ கடை தொடங்கும்போது ஏற்கனவே இருக்கும் டீ கடைகளில் ஒன்றாகவே மக்கள் நினைத்தார்கள். விற்பனையும் மந்தமாகவே இருந்தது. விற்பனையும், அதிகரிக்க வேண்டும், பயணுள்ளதாகவும் இடம் இருக்க வேண்டும் என சிந்தித்தபோது தான் இந்த இலவச ‘இன்டர்நெட்’ திட்டம் உதயமானது.
பெங்களூரு போன்ற நகரங்களில் இலவச ‘வை-பை’ என்பது எளிதானது. பல இடங்களில் கிடைக்கும் வசதியாக இருக்கிறது. ஆனால், நான் இருக்கும் கிராமங்களில் ‘வை-பை’ என்பது கிடைக்காத வசதிகளில் ஒன்று. அதுமட்டுமல்லாமல், எங்கள் கிராமம், அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாரச் செலவுக்கு பெற்றோர்கள் ரூ100 முதல் 150 மட்டும்தான் கொடுப்பார்கள். இதை வைத்துக்கொண்டு அவர்களால் ஸ்மார்ட்போன்களில் ‘நெட்பேக்’ ரீசார்ஜ் செய்ய முடியாது.
அதன்பின்தான் டீ கடையில் இலவச ‘வை-பை’ திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தேன். இது தொடர்பாக எனது நண்பர்களுடன் ஆலோசித்தேன். அவர்களும் இது சரியான முடிவு என ஊக்கம் கொடுத்தனர். அதன்பின், ரூ.3 ஆயிரம் செலவில் ‘வை-பை’ மோடமும், மாதத்துக்கு ‘அன் லிமிட்டட் நெட்பேக்’கும் வாங்கினேன்.
என்னிடம் டீ குடிக்க வரும் இளைஞர்கள் டீ டோக்கன் வாங்கியவுடன் அவர்களுக்கு பிரத்யேக ‘வை-பை’ ‘பாஸ்வேர்டு’ எண் வழங்கப்படும். அந்த எண் மூலம் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ‘வை-பை’ ஆன் செய்து ‘இன்டர்நெட்’டை அரை மணி நேரம் பயண்படுத்திக் கொள்ளலாம். 30 நிமிடங்களுக்குப் பின், தானாகவே ‘வை-பை’ இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.
ஒரே நேரத்தில் 15 முதல் 20 வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில், 2எம்.பி.பி.எஸ். வேகத்தில் ‘இன்டர்நெட்’ இணைப்பு கிடைக்கிறது. என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் சமூகவலைதளங்களையும், ‘லேப்டாப்’ இருந்தால் மின் அஞ்சல்களையும் பயன்படுத்துகிறார்கள்.
கடை தொடங்கும்போது 100 டீ விற்பனையான நிலையில் இப்போது நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 டீ விற்பனையாகிறது. டீ கடையும் நடத்தும் அதே வேளையில், மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் எனது கடை இருக்கிறது என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
