வங்கியில் பணம் பெற மணிக்கணக்கில் கால்வலிக்க காத்துக்கிடக்கும், மக்களுக்கு உதவ சூடாக டீ அளித்தும், பசிக்கு பீட்சா, சென்னா மசாலா அளித்தும் வடமாநிலங்களில் சில நல்ல மனிதர்கள் உதவி வருகின்றனர்.
நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிக்க ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாது என அறிவித்து, பிரதமர் மோடி கடந்த 8ந்தேதி அறிவித்தார். 10-ந்தேதியில் இருந்து மக்கள், தங்களிடமுள்ள செல்லாத பணத்தை வங்கியில் கொடுத்து, மாற்றி வருகின்றனர்.

அதிலும் பல வித கட்டுப்பாடுகளுடன், வங்கிக்கணக்கில் தங்களின் பணத்தைக்கூட எடுக்கமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஏ.டி.எம்.களும் முழுமையான செயல்பாட்டுக்கு வராததால், பணத்துக்காக வங்கிகளையும், தபால்நிலையங்களையும் தான் மக்கள் முழுமையாக நம்பி இருக்கின்றனர். இந்த நிலை நாடுமுழுவதும் தொடர்கிறது.
பணத்துக்காக வெயிலிலும், பனியிலும் கால்கடுக்க மக்கள் ஏ.டி.எம். வாசலிலும், வங்கியின் வாசலிலும் நாள்தோறும் காத்திருக்கிறார்கள். இதுவரை பணம் பெற வரிசையில் நின்று இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அதிலும் வட மாநிலங்களில் காலையில் கொளுத்தும் வெயில், இரவில் கொடூர பனி ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் மக்களின் தங்களின் பணத்தை வங்கியிலும், ஏ.டி.எம்.களிலும் எடுக்க காத்திருக்கின்றனர்.

இவர்களின் நிலையைப் பார்த்த பஞ்சாப் லூதியானாவைச் சேர்ந்த ஹரிஜிந்தர் குக்ரேஜ் மற்றும் அவரின் நண்பர்கள்குழு வங்கியின் முன் வரிசையில் நிற்கும் மக்களுக்கு இலவச தேநீர் அளித்து அவர்களின் சோர்வைப் போக்கி வருகின்றனர்.
அதேபோல, குஜராத் மாநிலம், துவராக நகரில், எச்.டி.எப்.சி. வங்கியின் முன் காத்திருக்கும் மக்களின் பசியைப் போக்க பீட்சா ஹட் நிறுவனம் சார்பில் இலவசமாக பீட்சா அளித்தனர். இதனால், மக்கள் ஓரளவு மகிழ்ச்சியடைந்தனர்.

குஜராத் மாநிலம், பூஜ் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் முன் நின்றிருந்த மக்களின் தாகத்தை போக்கும் வகையில் குடிநீர் பாக்கெட்டுகளையும், அரைலிட்டர் தண்ணீர் பாட்டில்களையும் போலீசார் இலவசமாக வினியோகம் செய்தனர்.
மேலும், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் மக்கள் படும் சிரமத்தையும், வங்கி ஊழியர்களின் பணிச்சுமையைப் பார்த்து, தானாக முன்வந்து, வங்கிப்பணியைச் செய்தனர்.
