‘பான் எண்’ணுக்கு விண்ணப்பம் செய்த சில நிமிடங்களில் பான் எண்ணும், ஸ்மார்ட்போனிலேயே வருமான வரி செலுத்தும் புதிய ‘ஆப்ஸை’யும் மத்திய நேரடி வரிகள் வாரியம் விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், பான் எண்ணுக்காக விண்ணப்பம் செய்து, வாரக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை, வருமானவரி செலுத்த அலுவலகத்துக்கு நேரில் செல்லவும் அவசியம் இருக்காது.

சில நிமிடங்களில்

வருமானவரி செலுத்துபவர்கள் எளிமையாக வரியை செலுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து பான் எண்ணை சில நிமிடங்களில் வழங்க முடிவு செய்துள்ளது.

ஆதார் எண்

ஆதார் எண்மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவரின் விவரங்கள், கை ரேகை ஆகியவற்றை ஆய்வு செய்தும் சில நிமிடங்களில் பான் எண் வழங்கப்பட உள்ளது.

உடனடியாக எண்

இது குறித்து வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஆதார் கே.ஒய்.சி. விண்ணப்பம் மூலம் ஒருவருக்கு சிம் கார்டு வழங்க முடியும் என்றால், அதே முறையைப் பின்பற்றி பான் எண்ணும் வழங்க முடியும். இப்போது பான் எண் பெற ஒருவர் விண்ணப்பம் செய்து 3 முதல் 4 வாரங்களுக்கு பின்புதான் கிடைக்கிறது. விரைவில் நாங்கள் கொண்டு வரும் திட்டத்தின் மூலம், விண்ணப்பம் செய்த சில நிமிடங்களில் பான் எண் பெறலாம். கார்டு மட்டும் சில நாட்களுக்கு பின் அனுப்பி வைப்போம்.

இது தொடர்பாக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மத்திய நேரடி வரிகள் வாரியம் பேசி வருகிறது. இதன் மூலம், தொழில் தொடங்குவது, தனிநபர் வருமானவரி செலுத்த பான் எண் பெறுவது எளிதாகும்.

ஸ்மார்ட் போன் ஆப்ஸ்

அதுமட்டுமல்லாமல், வருமான வரித்துறையினர் தனியாக புதிய செயலியை(ஆப்ஸ்) உருவாக்கி வருகிறார்கள். இதன்படி, வருமானவரி செலுத்துபவர்கள், அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை. அவர்களின் ஸ்மார்ட்போனில் நாங்கள் உருவாக்கும் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து, ரிட்டன் தாக்கல், உள்ளிட்டபல சேவைகளைப் பெறலாம். இந்த புதிய செயலி மூலம், முதல்முறையாக வருமானவரி செலுத்துபவர்கள், வரி செலுத்தி வருபவர்கள் அலுவலகத்தில் காத்திருக்காமல் விரைவாக வரி செலுத்த முடியும். இந்த செயலியும்விரைவில் அறிமுகப்படுத்தப்படும் '' எனத் தெரிவித்தார்.