ஹாலிவுட்டில் தொடங்கிய மீடூ விவகாரம் கோலிவுட் வரை வந்து தமிழ்த் திரையுலகை ஒரு கலக்கு கலக்கி விட்டது. சின்மயி தொடங்கி, யாஷிகா ஆனந்த் வரை பாலியல் புகார் கூறப்பட்டு வருகிறது. வைரமுத்து தொடங்கி, பெயர் குறிப்பிடப்படாத இயக்குநர்கள் வரை அவர்களது புகார் நீண்டு வருகிறது.

திரைத்துறை மட்டுமல்லாமல், கூகுள் நிறுவனமும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பவில்லை. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த 48 பேர், மீடூ விவகாரத்தில் வேலையை விட்டு தூக்கப்பட்டிருக்கிறார்கள். 

அந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் பதவியில் இருந்த 13 மேனேஜர்கள் உட்பட 48-க்கும் மேற்பட்டவர்கள் உடன் பணி செய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி வாஷிங்டன் போஸ் பத்திரிகையில் வெளியானது. இதனை கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சையும் உறுதி செய்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தைப்போல் டாடா குழுமத்தின் பிராண்டு ஆலோசகரான சுஹெல் செத் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சுஹெல் உடனான ஒப்பந்தத்தை டாடா குழும நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து டாடா நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரம், சுஹெல் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன், அவருடனான தொடர்பை டாடா நிறுவனம் துண்டித்துக் கொண்டது. மேலும், அவருடனான ஒப்பந்தத்தையும் உடனடியாக முடித்துக் கொண்டது. சுஹெல் செத், கோகோ கோலா, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.