தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விபத்தில் காயமடைந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள்  மறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை வேதனையுடன் குறிப்பிட்டு பேசிய கேரள முதல்வர் பினராயிவிஜயன், தமிழக இளைஞரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரினார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் முருகன் கடந்த 6-ந்ேததி கொல்லம் அருகே ஒரு விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காகஆம்புலன்ஸ் மூலம் கொல்லம், திருவனந்தபுரத்தில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால், உயிர்காக்கும் கருவிகள் இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. இதனால், 7 மணிநேரம்ஆம்புலன்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழக இளைஞர் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் வேதனையுடன் குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

கடந்த 6-ந்தேதி விபத்தில் சிக்கிய 30வயதான தமிழக இளைஞர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க 4 மருத்துவமனைகள் பல்வேறு காரணங்களைக் கூறி மறுத்துள்ளன. இதனால், அவர் உயிரிழந்துள்ளது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவத்துக்கு நான் உயிரிழந்த முருகன் குடும்பத்தாரிடம் அரசின் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த சம்பவம், மாநிலத்துக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தவிட்டது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதைத் தடுக்க  சட்டம் இயற்றுவது குறித்து அரசு எதிர்காலத்தில் பரிசீலனை செய்யும்.

சுகாதாரத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வரும் கேரள மாநிலத்தில் இதுபோன்ற துரதிருஷ்டமான சம்பவங்கள் நடந்து இருக்க கூடாது.

இந்த விவகாரத்தில் தமிழக இளைஞருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பதை கண்டறிய சிறப்பு நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தமிழக இளைஞர் குடும்பத்தாரிடம் மன்னிப்பு  கோரிய செய்தி, முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் தமிழில்வௌியிடப்பட்டு இருந்தது. வழக்கமாக மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.