தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார். பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் சிவில் விழா குடியரசுத்தலைவர் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவார் என்றும் மற்ற விருதுகள் வருகிற 28 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பட்டியலில் 34 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதில், இலக்கியம் மற்றும் கல்விக்காக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சிற்பி பாலசுப்ரமணியம், 85, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் இலக்கியவாதி, கவிஞர், என பல வகைகளில் அறியப்படும் இவர், 2001ல் மொழி பெயர்ப்புக்காக 'அக்கினிசாட்சி' என்ற புத்தகத்துக்கும், 2003ல் படைப்பிலக்கியத்துக்காக 'ஒரு கிராமத்து நதி' என்ற புத்தகத்துக்கும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

இதுக்குறித்து சிற்பி பாலசுப்ரமணியம் கூறுகையில், இலக்கியம் சார்ந்து பணியாற்றும் எனக்கு இந்த விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. இலக்கிய விருதுகள் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால், என் படைப்புகளுக்கு அங்கீகாரம் கொடுத்து, தேசிய அளவிலான விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை தமிழ் சார்ந்த படைப்பாளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த விருது, கவிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
