* சத்தியமங்கலம், புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்டது என்பதால் இங்கே சிறுத்தை, புலி, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்லது. சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் கொண்டி ஊசி வளைவை கடந்து சிறுத்தை சென்றதை வாகன ஓட்டிகள் பார்த்து அதிச்சியடைந்தனர். இந்த நிலையில் ‘மலைப்பாதையில்,  நடுவழியில் வாகனங்களை நிறுத்தி, ஓட்டுனர் மற்றும் பயணியர் இறங்க வேண்டாம்.’ என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். - பத்திரிக்கை செய்தி.

* இடதுசாரி பயங்கரவாதிகளான நக்சல்கள் மீது, அடுத்த ஆறு மாதங்களில் மிகவும் தீவிரமான நடவடிக்கையை சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை எடுக்க வேண்டும். அதேபோல் ‘அர்பன் நக்சல்’ என்றழைக்கப்படும், மக்களிடையே பிரிவினையை தூண்டி விடுவோர் மீதும் அவர்களுக்கு ஆதரவு அளிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - அமித்ஷா 

* தமிழக அரசு, புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாகவும், பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஐம்பதாயிரம் ஓட்டு பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இனி ஐந்தாயிரம் ஓட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து, ஆளுங்கட்சி தேர்தலை நடத்தப் போகிறதா! என்ற சந்தேகத்தை ஸ்டாலின் எழுப்பியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலை நிறுத்திடவும் ஆளுங்கட்சி திட்டமிட்டு வருகிறதா!? என சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற அடிப்படையற்ற, பொய்யான சந்தேகங்களை அவர் எழுப்புவது மிகவும் வருந்தத்தக்கது. -எஸ்.பி.வேலுமணி. 

* தி.மு.க. 37 லோக்சபா தொகுதிகளிலும் தற்காலிக வெற்றி பெற்றது. அதே வெற்றி அடுத்தடுத்த தேர்தல்களிலும் இருக்குமென்று நினைத்தனர். ஆனால் மூன்றே மாதங்களில் நிலைமை மாறிவிட்டது. இரண்டு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தல் நடக்கும், அதில் வெல்வோம். மக்கள் செல்வாக்கு இல்லாததால் தி.மு.க. பிதற்றிக் கொண்டிருக்கிறது. -    ஜெயக்குமார். 

* உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையல்ல. அதை முறையாக நடத்த வேண்டும், முறையான இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட வேண்டும், என்றே நீதிமன்றத்துக்கு கடந்த முறை சென்றோம். ஆனால் நாங்கள் இம்முறையும் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக திரும்பத் திரும்ப அ.தி.மு.க.வினர் பொய் கூறுகின்றனர். -ஸ்டாலின்.

* கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என்பதற்காக, குடிமராமத்து திட்டத்தை உருவாக்கியுள்ளோம். மூன்று ஆண்டுகளில் ஆயிரம் கோடிகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்தோம். அதன்படி பணிகள் நடந்து வருகின்றன. -ஓ.பன்னீர்செல்வம். 

* தமிழக உள்ளாட்சி தேர்தல், டிசம்பர் மாதம் நடக்குமென தகவல் வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கையில் வெளிப்படை தன்மை என்பதே இல்லை. எல்லாமே மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. -    முத்தரசன். 

* கர்நாடகா பகுதியில் தென் பெண்ணையாற்றில் அந்த மாநில அரசு, ஐந்து நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதனால் நம் தர்மபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்படும். இந்த வழக்கில், தமிழக அரசின் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் சரிவர வாதாடவில்லை. அதனால்தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. -துரைமுருகன். 

* பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்கப்பட உள்ளது. உடனே பா.ஜ. வர்புறுத்தலால்தான் இண்டஹ் முடிவா என்கிறீர்கள்? பா.ஜ.க. என்ன நாட்டுக்கு ஆகாத கட்சியா? நல்ல கருத்துக்களை அவர்கள் சொன்னால், நாங்கள் கேட்க கூடாதா?- ராஜேந்திர பாலாஜி.

* இந்து அறநிலையத்துறையின் கீழ், சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோயில் உள்ளது. அறுபத்தி மூவர் விழாவின் போது, திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து, திருநீறு பூசி, ஊர்வலம் நடக்கும். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருவள்ளுவர் இந்து இல்லையா? திருவள்ளுவர் கோயில் அறநிலையத்துறைக்கு வேண்டாம்! என ஸ்டாலின் சொல்ல முடியுமா?-    பா.ஜ.க. நாராயணன் திருப்பதி