ரூ.500, ரூ1000 நோட்டு பிரச்சினையால், நாட்டில் கடும் பணப் பற்றாக்குறை நிலவும் நிலையில், பக்தர்களிடம் காணிக்கையை ‘ஸ்வைப்பிங் மெஷின்’ வாயிலாக பெறும் ‘இ-உண்டியல்’ திட்டத்தை சபரிமலைஐய்யப்பன் கோயில் நிர்வாகம் நேற்று தொடங்கியுள்ளது.
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 15-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

ஆனால், கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத அறிவிப்பின் காரணமாக, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதிலும் கடும் சிரமம் ஏற்படும் என்பதை கோயில் நிர்வாகம் உணர்ந்தது.
இதையடுத்து, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கை செலுத்தும் இ-உண்டியல் திட்டத்தை திருவாங்கூர் தேவசம் போர்டு நேற்று தொடங்கியது. ஆழப்புழா துணை ஆட்சியர் இ. சந்திரசேகர் ‘ஸ்வைப்பிங் மெஷின்’
மூலம் காணிக்கை செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் அஜய் தரயல் கூறுகையில், “ பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதில் எந்த வரைமுறையும், அளவும் இல்லை. பக்தர்கள் தங்களின் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம், ஒரு ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் காணிக்கை செலுத்த முடியும். இந்த புதிய திட்டத்தால் லட்சக்கணக்கில் வரும் பக்தர்கள் சில்லரை தட்டுப்பாட்டால் காணிக்கை செலுத்தமுடியாமல் போகும் நிலை மாறும். இந்த ஸ்வைப்பிங் மெஷின் விரைவில் கோயிலின் முக்கிய இடங்களில் நிருவப்படும்'' எனத் தெரிவித்தார்.
