மாணவர்கள் மீதான தாக்குதலை ‘இன, நிறவெறி’ தாக்குதல் என்று குறிப்பிட்டு ஆப்பிரிக்க நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை வியப்பும், வேதனையும் அளிக்கிறது. அவ்வாறு திட்டமிட்டு நடத்தப்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார்.

நொய்டா சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த மாதம் 27-ந்தேதி உயிரிழந்தார். இதற்கு கென்யாவை சேர்ந்தவர்கள் அந்த மாணவரை கடத்தி அளவுக்கு அதிகமான போதை பொருளை வலுக்கட்டாயமாக உட்கொள்ள செய்ததே காரணம் என்று புகார் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பேரணியின்போது, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்கு பின்னரும், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் ஒரு சில இடங்களில் தொடர்ந்து வந்தன.

கைது நடவடிக்கை

இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்த உத்தரப்பிரதேச அரசு, தாக்குதலில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்தது. இந்நிலையில் இந்தியாவில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இன மற்றும் நிறவெறியின் அடிப்படையில் நடப்பதாக ஆப்பிரிக்க நாடுகள் குற்றம்சாட்டி இருந்தன.

இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர் கே.சி. வேணுகோபால் எழுப்பி, ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்டார். இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அளித்த பதில்:- ‘வெளிநாட்டவர்களை குறிவைத்து இன மற்றும் நிறவெறி ரீதியான தாக்குதல்’ என்று நொய்டா சம்பவத்தை ஆப்பிரிக்க நாடுகள் வர்ணித்துள்ளன.

தாக்கப்படும் இந்தியர்கள்

இது வியப்பும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனை யாராலும் குறை சொல்ல முடியாது. இனவெறி தாக்குதல் என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுவதாகும். ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நொய்டாவில் நடக்கவில்லை. அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் தாக்கப்படுகின்றனர். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்ளை எல்லாம் இனவெறி, நிறவெறி தாக்குதல் என்று இந்தியா கூறவில்லை. ஆப்பிரிக்க நாடுகளின் அறிக்கை தொடர்பாக வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் அந்நாட்டு தூதர்களுடன் பேசினார்.

பிரதமர் மோடி

மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் திருப்தி இல்லாவிட்டால் ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் பிரதர் மோடியை சந்தித்து பேசலாம். நொய்டா தாக்குதலை சர்வதேச மனித உரிமை கவுன்சில் விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதற்கெல்லாம் அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். வலுவான மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், சுதந்திரமாக செயல்படும் ஊடகங்கள் மற்றும் நீதித்துறை இந்தியாவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.