அயோத்தி ராமருக்கு 5000 அமெரிக்க வைரக் கற்களுடன் தயாரான பிரம்மாண்ட நெக்லஸ்; இணையத்தில் வைரல்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024, ஜனவரி 22ஆம் தேதி நடக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் முதல் கட்டப் பணிகள் விரைவில் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். பல்வேறு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையம், தங்கும் விடுதிகள் என்று பல்வேறு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ராமர் கோவிலுக்கு சிறப்பு வைர நெக்லஸ் தயாரித்துள்ளார்.
இந்த நெக்லஸ் 5000 அமெரிக்க வைரக் கற்கள், இரண்டு கிலோ வெள்ளியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லசை மொத்தம் 40 கலைஞர்கள், 35 நாட்களில் செய்து முடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நெக்லஸ் கோவில் வடிவத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாமக்கலைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 42 பெல்கள் தயாரித்துள்ளார். மேலும், பெங்களூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் 48 பெல்கள் செய்வதற்கு ஆர்டர் கொடுத்து உள்ளார் என்றும் 42 பெல்கள் மட்டும் 1,200 கிலோ எடை கொண்டது என்று தெரிய வந்துள்ளது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இந்த பெல்கள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவிலுக்கு மொத்தம் 108 பெல்கள் தேவை என்று தெரிய வந்துள்ளது.
முன்னக்கூட்டியே, ஜனவரி 16ஆம் தேதி சிறப்பு வேத பூஜைகள் கோவிலில் நடைபெற இருக்கிறது. கோவில் நிர்வாகம் 4.40 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா மையம் ஒன்றை கட்டுவதற்கு தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர், மறுநாள் 23ஆம் தேதி பக்தர்களுக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.