குற்றப்பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்றும், குற்ற பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிரிமினல் மற்றும் குற்ற வழக்குகளில் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடைவிதிக்கக் கோரி தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்டங்களாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாநிலங்களிலும் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 1581 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள, அதன்பின் பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்கள் இல்லை, ஆதலால் அனைத்து வழக்குகள் குறித்த விவரங்களையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய மாநில அரசு, மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்ககளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் அறிக்கை தாக்கல் செய்தது. 

அப்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எம்.பி.எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் எத்தனை நிலுவகையில் இருக்கின்றன, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிட்டதா, வழக்குகளை மாற்றி அமைத்துவிட்டீர்களா, எத்தனை வழக்குகள் இன்னும் மாற்றப்படாமல் இருக்கிறது என்னென்ன அம்சங்கள் கொண்ட வழக்காக இருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருந்தது. இதனிடையே தமிழகத்தில் சமீபத்தில் எம்.பி. எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது., தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

நாடாளுமன்றம் மட்டுமே சட்ட திருத்தத்தால் தடைகளை விதிக்க முடியும் என்றும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை என்றம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் குற்ற பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.