Supreme Court to Set up Constitution Bench to Hear Pleas Against Aadhaar

ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சான அமர்வு அமைக்கப்படும். நவம்பர் இறுதியில் இருந்து அனைத்து மனுக்களையும் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகேமற்கு வங்காள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தது. அதை விசாரணை செய்த நீதிமன்றம், கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு எதிர்க்கலாமா?, தனி நபர் அடிப்படையில் இதை எதிர்த்தால் விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், கூறுகையில், “ ஆதார் இணைப்பது தொடர்பாக பல்வேறு தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 10, 12ம் வகுப்பு தேர்வுக்குகூட ஆதார் தேவை என்று கூறுகிறார்கள்.

ஆதார் எண்ணை நலத்திட்டங்களில் இணைப்பது, செல்போன், வங்கிக்கணக்குகளில் இணைப்பது தொடர்பான விஷயத்தில் மத்திய அரசு தனது வாதத்தை எடுத்துவைக்க தயாராக இருக்கிறது. அரசியல் சாசன அமர்வு விசாரிக்க தகுதியானது என்றால் அது தொடர்பாக நீதிமன்றம் முடிவு செய்யலாம்.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து ஆதார் எண் தொடர்பாக பல்வேறு மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. எந்த விதமான இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், ஆதார் எண்ணுக்கு ஆதரவாக மத்திய அரசின் சார்பில் பிரமாணப் பத்திரங்களையும் வேணுகோபால் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வாலிகர், டி.ஒய்.சந்திரசூட்ஆகியோர் கொண்ட அமர்வு, “ ஆதார் தொடர்பான மனுக்கள் அனைத்தையும் விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். நவம்பர் இறுதியில் அனைத்து மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

முன்னதாக, பல்வேறு நலத்திட்டங்களின் பயன்பெற ஆதார் எண்ணை டிசம்பர் 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறி இருந்தது. இந்த தேதியை 2018ம் ஆண்டு, மார்ச் 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளதாக கடந்த வாரம் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 

சமீபத்தில் அந்தரங்க உரிமை குறித்த வழக்கில் தீர்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, அந்தரங்க உரிமையை பாதிக்கும் விதத்தில் ஆதார் கார்டு இணைப்பு திட்டம் இருப்பதாக் கூறி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்தரங்க உரிமை குறித்து விசாரித்த தலைமை நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு ஆதார் தொடர்பான மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கவும், நீதிபதி நாரிமன் ஆதார் மனுக்களை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.