supreme court postponed aadhaar case

பான் எண் பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு அடையாள எண்ணை வழங்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த போது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்த பா.ஜ.க., மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும், ஆதாரை அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயப்படுத்தி வருகிறது. 

சமையல் எரிவாயு மானியம் என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதற்கிடையே பான் கார்டு எனப்படும் நிரந்திர கணக்கு எண் பெற ஆதார் அவசியம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் முகில் ரோத்தகி, ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதால் போலி பான் எண் பெருமளவில் தடுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டிருந்தார். 

இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.