மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் அவசர, அவசரமாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனடியாக விளக்கம் தெரிவித்தார். 

இந்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக  ரிட் மனுவை தாக்கல் செய்தன. இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தேவேந்திர பட்நவிஸிக்கு  அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் பட்நவிஸ் சமா்ப்பித்த கடிதம் ஆகியவற்றை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தேவேந்திர பட்நவிஸ் அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் பட்நவிஸ் சமா்ப்பித்த கடிதம் ஆகிய இரு கடிதங்களையும் நீதிபதிகளிடம் சமா்ப்பித்தார். 

நேற்று அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை பொருத்தமட்டில் பட்நவிசுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பது மட்டுமே தற்போதைய முக்கிய பிரச்சனையாகும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு வழங்குவதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.