இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 4300ஐ கடந்துவிட்டது. கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

ஊரடங்கு அமலில் உள்ளதால் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைக்கு தனியார் பரிசோதனை மையங்களில் ரூ.4500 அல்லது அதற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வருமானத்தை இழந்து மக்கள் கஷ்டப்பட்டுவரும் நிலையில், கொரோனா பரிசோதனைக்கும் கட்டணம் வாங்கினால், மக்கள் என்னதான் செய்வார்கள்? 

இந்நிலையில், இதுகுறித்த பொதுநல மனு மற்றும் கொரோனா தொடர்பான பல பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு மற்றும் தனியார் என எந்த பரிசோதனை மையங்களாக இருந்தாலும் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. கட்டணம் வசூலிக்காமல் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவின் விளைவாக, பரிசோதனை மையங்கள் இலவசமாக பரிசோதனை மேற்கொண்டால், மக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.