இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், ஏப்ரல் 14 வரை அமலில் இருந்த ஊரடங்கு ஒடிசா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தேசியளவிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது உறுதி. இதுகுறித்து நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் ஏற்கனவே வருவாயை இழந்து தவித்துவரும் நிலையில், கொரோனா டெஸ்ட்டுக்கும் தனியார் ஆய்வகங்களில் ரூ.4500 வசூலிக்கப்படுவது ஏழை மக்களை சிக்கலுக்குள்ளாக்கும் என்பதால், தனியார் ஆய்வகங்களிலும் இலவசமாக கொரோனா டெஸ்ட் செய்ய உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனுவில் இருந்த நியாயத்தை கருத்தில் கொண்டும், தனியார் ஆய்வகங்களிலும் இலவசமாக கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டால் அதிகமானோருக்கு விரைவில் டெஸ்ட் செய்ய முடியும் என்பதாலும் தனியார் ஆய்வகங்களிலும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஏழைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அனைவருக்கும் இலவச பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அப்படியில்லை என்றால் இலவசமாக செய்யப்படும் சோதனைக்கான கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும் என்று சில தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனியார் ஆய்வகங்களில் இலவச பரிசோதனை எனும் உத்தரவால், கட்டணம் செலுத்தக்கூடியவர்களும் பயனடைவார்கள். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கான திட்டத்தை அரசு வகுக்குமென்றார்,

எனவே, ஆயுஸ்மான் பாரத் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் தனியார் ஆய்வகங்களில் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோல ஏழை, எளிய மக்களுக்கும் இலவசமாகவே பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதனால் அனைவருக்கும் இனி தனியார் ஆய்வகங்களில் இலவசம் கிடையாது. யார் யாருக்கு இலவச பரிசோதனை என்பதை அரசே முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.