மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகள் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக சனிக்கிழமை காலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு 2-வது நாளாக 2-வது நாளாக இன்று நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, ஆட்சியமைக்க வருமாறு பட்னாவிசுக்கு ஆளுநர் அனுப்பிய அழைப்பு கடிதம், மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் அளித்த, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் உள்ளிட்ட விவரங்கள் சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து விசாரணை தொடங்கியது. உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற சிவசேனா மற்றும் தேசிய காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

அப்போது ஆளுநரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆளுநர் முடிவில் நீதிமன்றங்கள் தலையிடவே முடியாது என்றார். ஆளுநருக்கு விரைவாக செயல்படவோ, உத்தரவிடவோ முடியாது என்றார். பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கண்ணா, பெரும்பான்மை இருக்கிறது என்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.

சிவசேனா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவதற்கு, இது என்ன தேசிய அவசர நிலை பிரகடனமா? என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது என்றார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கட்சி பேதமின்றி சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதனையடுத்து, முகுல் ரோகத்கி சட்டப்பேரவையில் பட்னாவிஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்திருப்பதாக கூறினார். இதில் நீதிமன்றம் தலையிட்டு வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது என்றும் கூறினார். இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளனர்.