முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவிடாமல் கேரள அரசு இடையூறு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளை தமிழக அரசே மேற்கொள்ள வேண்டும்  அணையின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்யும் என உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் உத்தரவிட்டிருந்ததது.

ஆனால் அணை பராமரிப்பு பிரச்சனையில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில் அணை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்தோம்.

ஆனால், பராமரிப்புப் பணிகளுக்காக செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள அரசு தடுத்து நிறுத்துகிறது. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹார் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்குமாறு கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 2-ம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.