நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சாலை  அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மாற்ற உத்தரவிட்டார்.

கடந்த 12 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாகவும், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு பற்றி முழுமையாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவில், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது தவறானது என்றும், ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையால் நடத்தப்பட்ட விசாரணையின்போது ஆதாரங்கள் முழுமையான எதுவும் இல்லை எனவும், அதன் அடிப்படையில் சிபிஐ விசாரிக்க கூடாது என்று வாதிடப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்க திமுகவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 4 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதுவரை வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தனர். மேலும் வழக்கின் விசாரணையைத் தள்ளி வைப்பதாகவும் உத்தரவிட்டனர்.