ஐ.ஏ.என்.எஸ். மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் பல ருசிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது.  நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதால் கருத்து கணிப்புகள் முடிவுகள் அரசுக்கு எதிராக இருக்கும் என எதிர்பார்த்தால் முடிவுகள் வேறுவிதமாக உள்ளது.

ஐ.ஏ.என்.எஸ். மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் பங்கேற்ற மக்களில் பெரும்பாலானோர் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி ரொம்ப திருப்தி அளிப்பதாகவும், பிரதமர் மோடியை ஆதரித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 56.4 சதவீதம் பா.ஜ.க. ஆட்சி மிகவும் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும், சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றை எதிர்த்து கடுமையாக போராடும் வடகிழக்கு மாநிலங்களில் 82.1 சதவீதம் பேர் பா.ஜ.க. ஆட்சி திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் 62.3 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் பேர் தங்களால் நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்க முடிந்தால் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்போம் என தெரிவித்துள்ளனர். அதேசமயம் சில விஷயங்களில் மோடியின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக 20.9 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 16.8 சதவீதம் பேர் மோடியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என பதிவு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமித் ஷா செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 50.7 சதவீதம் பதில் அளித்துள்ளனர்.