பாலிவுட்டின் முன்னணி பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் அமிதாப் பச்சன். உத்தர பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவரது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திலும் கடனில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் அதிகம். எனவே கடனில் சிக்கியுள்ள விவசாயிகளின் கடனை அடைக்க அமிதாப் முடிவு செய்தார்.

இதனையடுத்து 1,398 விவசாயிகளின் கடன் தொகையாக ரூ. 4.05 கோடியை அடைத்துள்ளார். தான் கடனை அடைத்த விவசாயிகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 70 பேரை மும்பைக்கு அழைத்து விருந்தளித்து வங்கிக் கடனை அடைத்தற்கான கடிதங்களை அவர்களிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளார் அமிதாப்.

இதற்காக லக்னோவிலிருந்து மும்பை வரும் ரயிலில் ஒரு பெட்டி முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 26ஆம் தேதி மும்பை வரும் விவசாயிகளிடத்தில் வங்கிக் கடிதங்களை அவர்களிடத்தில் வழங்கவுள்ளார். அமிதாப்பின் செய்தி தொடர்பாளர், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளதோடு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடன்களை அமிதாப் அடைத்தார். அதுபோல் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த 44 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார்.

இவரைப் போல் பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகரான நானா படேகரும் மகாராஷ்ட்ராவில் கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடன்களை அடைத்து வருகிறார்.