காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு. Shashi Tharoor-ன் மனைவி மர்மச் சாவு குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான AIIMS ஆகியவை சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்‍கைகளை ஆராய்வதற்காக புதிய மருத்துவக்‍ குழு அமைக்‍கப்பட்டுள்ளது. 

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்‍ காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த Shashi Tharoor, சுனந்தா புஷ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவிவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி இரவு தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் அறையில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி போலீசார் வழக்‍குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்கள் ஆய்வுக்‍காக அனுப்பி வைக்‍கப்பட்டன.

இதனை ஆய்வு செய்த அமெரிக்‍க புலனாய்வு அமைப்பான FBI மற்றும் AIIMS நிறுவனம் தங்களுடைய அறிக்‍கைகளை, வழக்‍கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்‍ குழுவுக்‍கு இரண்டு வாரங்களுக்‍கு முன்பு அனுப்பிவைத்தன.

இவற்றை ஆராய்வதற்காக புதிய மருத்துவக்‍ குழு அமைக்‍கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டெல்லி, சண்டிகர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில், சுனந்தா புஷ்கரின் மடிக்‍கணினி பதிவுகளை ஆராய சிறப்பு புலனாய்வுக்‍ குழு நடவடிக்‍கை மேற்கொண்டுள்ளது. இதன் பின்னரே சுனந்தா புஷ்கரின் மரண மர்ம முடிச்சு அவிழ்க்‍கப்படும் என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.