சமையல் கியாசுக்கு மானியத்தை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக சேர்ப்பதுபோல், ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவுப்பொருட்களுக்கான மானியத்தையும் வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இதன்படி, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ஒவ்வொரு மாதத்துக்குரிய உணவு தானியங்களின் மானியத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட்செய்யப்படும். எலெக்ட்ரானிக் ஸ்வைப் எந்திரம் மூலம் பணத்தை அளித்து, பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். 

இந்த திட்டம் இப்போது ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, மத்திய உணவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுப்பியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மானியத்தொகை வீணாகாமல், உணவுப்பொருட்கள் வீணாகாமல் பயணாளிகளுக்க மட்டும் கிடைக்கும். 

இது குறித்து உணவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த திட்டத்தின்படி, பயனாளிகள், தங்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட்செய்யப்படும் மானியத் தொகையை பயன்படுத்தி பொருட்கள் வாங்காமல் இருந்தால், அல்லது வேறு ஏதாவது பயன்படுத்தினால், அடுத்த மாதம் மானியத் தொகை டெபாசிட் செய்யப்படுவது நிறுத்தப்படும். இதன் மூலம் பயனாளிகள் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பணத்தை வேறு எதற்கும் பயன்படுத்துவது தடுக்கப்படும்.

சமையல்கியாஸ் மானியத் திட்டத்தில் சில நேரங்களில் குறிப்பிட்ட எல்.பி.ஜி.சப்ளையருக்கு அரசு மானியத்தை அளித்து,பயனாளிகளுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் அளிக்க வைக்கும். ஆனால், ரேஷன் பொருட்கள் விஷயத்தில், பயனாளிகள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு அதன் மூலமே உணவுப்பொருட்கள் வாங்கப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் 81 கோடி மக்கள் ரேஷனில் மானிய விலையில் ஒரு ரூபாய் முதல் 3 ரூபாய் வரை உணவுப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த மானியம் அளிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி செலவாகிறது.

இந்த திட்டம் இப்போது புதுச்சேரி, தாதர்நகர் ஹாவேலி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மட்டுமே சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்த அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.