Subramanian Swamy To File Case TTD Matter
திருமலை திருப்பதி தேவாஸ்தானத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி பொதுநல வழக்கு தொடுக்க உள்ளார். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள திருப்பதி தேவாஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக, ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
ஏழுமலையான் ஆபரணங்கள் மாயமானதாகவும், நிலவறையில் உள்ள பொக்கிஷங்களை எடுக்க, மடப்பள்ளியின் தரை தளத்தை தோண்டியதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஆகம விதிகளை திருப்பதி தேவஸ்தானம் மீறுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக திருப்பதி தேவஸ்தான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப் போவதாக பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த வாரம் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் யமுனாவை சுத்தப்படுத்தும் திட்டம் ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தயாராக உள்ளது என்றார். 
இந்நிலையில் திருப்பதி விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
