திருமண வீடியோ மற்றும் போட்டோக்களில் இருந்து பெண்களை மார்பிங் முறையில் தலையை மாற்றி ஆபாச படமாக்கி வாட்ஸ் அப் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு மிரட்டி வந்த வீடியோ சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் கோழிக்கோடு அருகே வடகரையைச் சேர்ந்தவர் தினேசன் வடகரை பஸ் நிலையம் அருகே ஒரு ஸ்டூடியோ நடத்திவருகிறார். இந்த ஸ்டுடியோவில் பிபீஷ்  என்பவர் வீடியோ எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு போன் செய்த வீடியோ எடிட்டர் பிபீஷ், தன்னிடம் அந்த பெண்ணின் நிர்வாண படம் இருப்பதாகவும், அதை வாட்ஸ் அப்பில் வெளியிடப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண்  தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் பிபீஷின் ஸ்டுடியோவுக்கு சென்று பரிசோதித்தபோது அவரது கம்ப்யூட்டரில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளம்பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த பெண்கள் அனைவரும் உறவுக் காரர்களின் திருமணத்திற்கு வந்தவர்கள். அதுமட்டுமல்ல மணப்பெண்ணின் புகைப்படத்தையும் மார்பிங் செய்து வைத்திருந்ததாம்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர் வடகரை போலீசில் புகார் செய்தனர். அதன் பின்னர் தான் பிபீஷ் இதே போல் மேலும் பல இளம்பெண்களுக்கு போன் செய்து மிரட்டியது தெரியவந்தது.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பிபீஷ் உட்பட 3 பேரும் தலைமறைவானார்கள். போலீசாரின் தீவிர விசாரணையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கோழிக்கோட்டில் வைத்து தினேசன் மற்றும் அவரது தம்பி கைது செய்யப்பட்டனர்.

வீடியோ எடிட்டர் பிபீஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் பிபீஷை கைது செய்தனர். 

அதன் பிறகு தான் பிபீஷ் எத்தனை இளம்பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கியுள்ளார், அதை பயன்படுத்தி அவர் யார், யாரை மிரட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

வீடியோ எடிட்டர் பிபீஷின் இந்த செயல் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியில் உள்ளனர்.