Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா... வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடியா? அதிரவைக்கும் அறிக்கை

வெளிநாடுகளில் இந்தியர்கள் மறைத்து வைக்கப்பட்ட, கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி என்று ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Studies Say That Indians Have Reportedly Stashed 34 Lakh Crore In Black Money Abroad
Author
Delhi, First Published Jun 26, 2019, 6:30 PM IST

வெளிநாடுகளில் கணக்கில் காட்டாத, சொத்துகளை மதிப்பிடுமாறு தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நிதி மேலாண்மை நிறுவனம், தேசிய பொது கொள்கை மற்றும் நிதி நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களை கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி நிறுவனங்களும் ஆய்வு செய்து  மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்ய எம்.வீரப்பமொய்லி தலைமையில் நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. 

அந்த குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் 28–ந் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதன்பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அந்த அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், 1980 - 2010 -ம்  ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்,  இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.26 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தேசிய பொருளாதார மேலாண்மை நிறுவனம், கடந்த 1990–ம் ஆண்டிலிருந்து  2008–ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட சொத்துகளின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. 

தேசிய பொதுக்கொள்கை மற்றும் நிதி நிறுவனம், 1997–ம் ஆண்டில் இருந்து 2009–ம் ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களின் சட்டவிரோத சொத்துகளின் மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 % இருந்து 7.4 % வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.  பெரும்பாலான சொத்துகள் ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்துகள், குட்கா, புகையிலை, தங்கம்–வெள்ளி, சினிமா படம், கல்வி ஆகிய துறைகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும், கருப்பு பண உருவாக்கம் மற்றும் கருப்பு பண குவிப்பை மதிப்பிட நம்பகமான வழிமுறை இல்லை என்றும், இந்த மதிப்பீடுகளை செய்ய ஏற்றுக் கொள்ளப்பட்ட துல்லியமான வழிமுறை இல்லை என்றும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளது. யூகங்கள் அடிப்படையிலேயே இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 3 அறிக்கைகளிலும் ஒருமித்த தன்மை இல்லை. நேரமின்மை காரணமாக, இந்த நிலைக்குழுவால் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, இதை முதல்கட்ட அறிக்கையாகவே கருத வேண்டும். இருப்பினும், இவற்றை அடிப்படையாக கொண்டு, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மற்றும் கணக்கில் காட்டாத சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்பார்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios