கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 50 சதத்துக்கும் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தால், அதே செமஸ்டரில் மீண்டும் படிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை நடப்பு கல்வி ஆண்டுமுதல் அமல்படுத்தப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 

தெலங்கானா மாநில உயர்கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் குழு சேர்ந்து இந்த முடிவு எடுத்துள்ளதால், மாநிலத்தில் உள்ள அனைத்து பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

விருப்பத்தின் அடிப்படையில் பாடங்களை தேர்வு செய்து படிக்கும் முறையான (சி.பி.சி.எஸ்.) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியதன் விளைவாக இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய உத்தரவால் மாநிலத்தில் உள்ள 1,300 கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

இந்த உத்தரவு நடப்பு கல்வி ஆண்டுமுதல் அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெலங்கானா மாநில உயர்கல்வி கவுன்சில் தலைவர் பாப்பி ரெட்டி கூறுகையில், “ இந்த புதிய முறையின்படி, பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள், 50 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண்கள் பாடத்தில் எடுக்க கூடாது. அவ்வாறு எடுத்தால், அதே ஆண்டு மீண்டும் படிக்க வேண்டியது இருக்கும்,

இது அனைத்து செமஸ்டர்களுக்கும் பொருந்தும். 1, 3 5ம் செமஸ்டரில் தேர்வு இருக்காது, 2,4,6 செமஸ்டரில் தேர்வு இருக்கும், அதில் 50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் அதே ஆண்டு மீண்டும் படிக்க வேண்டும் ’’ எனத் தெரிவித்தார். 

இதற்கு முன் 50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் கூட மாணவர்கள் அடுத்தடுத்து செமஸ்டர்களுக்கு தேர்ச்சி பெறுவார்கள் அந்த முறை நீக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவர்கள் ஒவ்வொரு செமஸ்டரில்ம் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவேடு பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அடுத்த செமஸ்டருக்கு தேர்ச்சி பெற முடியும். 

தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை குறித்து கல்வியாளர்கள் கருத்து கூறுகையில், “ தெலங்கானா அரசின் இந்த திடீர் உத்தரவு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் அறிவியல், வணிகவியல், , கலைப்பிரிவுகளில் படிக்கும் ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்களை பாதிக்கும். 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு பயிலும் 6 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையே தெலங்கானா பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு கல்லூரி நிர்வாக மேலாண்மை அமைப்பின் தலைவர் ரமணா ரெட்டி கூறுகையில், “ பல கல்லூரி நிர்வாகங்கள் தெலங்கானா அரசிடம் இருந்து முறையான அறிவிக்கை கிடைத்தபின், அதில் உள்ள அம்சங்களை முழுமையாக படித்து ஆய்வு செய்தபின், முடிவு எடுப்போம்’’ என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே மாநிலத்தில் 10ம் வகுப்பு முதல் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் வரையிலான மாணவர்கள், படித்துக்கொண்டு இருப்பவர்கள் குறித்த பட்டியலையும் தெலங்கானாஅரசு தயார் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

இதற்காக தனியாக இணையதளத்தை உருவாக்கி வரும் தெலங்கானா அரசு, அந்த இணையதளத்தில் மாணவர்களின் வருகை பதிவு, சான்றிதழ், விடுதி, சாப்பாடு வசதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல விவரங்களை சேர்க்க உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக அனைத்து மாணவர்களின் விவரங்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் முதல் மாநிலமாக தெலங்கானா மாநிலம் வர உள்ளது.