நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் அதிரித்து வருகிறது. கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதேபோன்ற ஒரு சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பாலாஜிபெட்டா அருகில் உள்ள அம்மப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவன் சிறுவன் ஜஸ்வானந்த் (9).

ஜஸ்வானந்த் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன், வீட்டில் உள்ளவர்களிடம், தான் பண்ணை வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளான்.

பண்ணை வீட்டுக்கு அருகே தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் ஜஸ்வானந்த், பண்ணை வீட்டுக்கு செல்ல தெரு வழியாக வந்தபோது, அங்கிருந்த நாய்கள் அவனை சூழ்ந்து கொண்டது. 

அலறியபடி சிறுவன் ஓட முயன்றும், அவனை துரத்திப் பிடித்த நாய்கள், பயங்கரமாக கடித்து குதறி உள்ளன. அப்போது அங்கு வந்த சிலர், சிறுவனை தெருநாய்கள் கடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதன் பின்னர், அங்கிருந்த நாய்களை துரத்திவிட்டு, சிறுவனை மீட்டுள்ளனர். பின்னர் அந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லும் போது சிறுவன் ஜஸ்வானந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளான். 

தெருவில் நடந்து சென்ற சிறுவனை, தெருநாய்கள் கடித்து குதறி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.