தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளதுடன், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆலை மூடப்பட்டதற்காக தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்கவும் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்களும் தெரிவித்து இருந்தனர். 

அடுத்துவரும் மூன்று வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான பணிகளை தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் மேற்கொள்ளவேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையில் இருப்பதால், தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும், ஜனவரி 2, 2019 வரை அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்கிற நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

 

தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்தால் அந்த விசாரணையில் தங்களது கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்து உத்தரவிடும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாக வேதாந்தா குழுமத்தினர் அவர்கள் தரப்பு வாதத்தை முன் வைத்து வருகின்றனர். வேதாந்தா குழுமம் தாக்கல் செய்துள்ள கேவியட் மனு தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.