ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் சேமிப்பு கணக்கில் அபராதத்தை குறைத்து எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அபராதம் குறைக்கப்படுவதால் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி சேமிப்பு கணக்கில் இருப்பு தொகை குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. 

அதாவது, பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.

50 சதவீதம் முதல் 75 சதவீத பற்றாக்குறை இருந்தால் 75 ரூபாயு டன் கூடுதல் வரி, 50 சதவீதத்துக்கு கீழ் பற்றாக்குறை இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரி செலுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் ரூ.20 முதல் 50 வரை அபராதம் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என எஸ்பிஐ அறிவித்திருந்தது. 

அந்த வகையில் தற்போதும் மீண்டும் அபராத தொகையை எஸ்பிஐ வங்கி மாற்றி அமைத்துள்ளது. 

அதாவது, சேமிப்பு கணக்கில் இருப்பு குறைவுக்கான அபராதத்தொகையை எஸ்பிஐ குறைத்துள்ளது. 

மாநகரப்பகுதியில் அபராதத்தொகையாக ரூ. 50 +ஜிஎஸ்டி ரூ.15 என ரூ. 65 வசூலிக்கப்படும் எனவும் நகராட்சி பகுதியில் அபராத்தொகையாக ரூ.40+ ஜிஎஸ்டி ரூ.12 என ரூ. 52 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய கட்டண அபராத தொகை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.