பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக நிறுத்த ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.

நாட்டில் இப்போது வங்கி கணக்குகள் வைத்திருப்போரில் பெரும்பாலான மக்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, ஏடிஎம் மூலம் எளிதில் பணம் எடுத்து வருகின்றனர். ஆன்லைன் பரிமாற்றம் செய்பவர்கள் மிக குறைவுதான். 

இந்நிலையில் டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க உள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில், டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்ட வர திட்டமிட்டுள்ளோம். அதனை நிச்சயம் செய்து முடிக்க முடியும். நாட்டில் தற்போது 90 கோடி டெபிட் கார்டுகளும், 3 கோடி கிரெடிட் கார்டுகளும் உள்ளன. எஸ்பிஐயின் யோனோ செயலி போன்ற டிஜிட்டல் தீர்வுகள் மூலம் டெபிட் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். 

மேலும், தற்போது யோனோ மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுகிறது. இந்த யோனோ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியும், கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். இதற்காக ஏற்கனவே 68 ஆயிரம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்படும் என எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.