Asianet News TamilAsianet News Tamil

துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு…ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வன்முறை

srinagar election
srinagar election
Author
First Published Apr 9, 2017, 6:53 PM IST


துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு…ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வன்முறை

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும் வன்முறை உண்டானதால் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தேர்தலை சீர்குலைக்க…

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியானது புத்காம், கந்தர்பெல் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் பரவியுள்ளது. இதன் உறுப்பினராக பிடிபி கட்சியை சேர்ந்த தாரிக் ஹமீது கர்ரா இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இதன் தொடர்ச்சியாக கர்ரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காலியான ஸ்ரீநகர் எம்பி பதவிக்கு நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனை சீர் குலைக்கும் முயற்சியாக 2 நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி கட்டிடம் ஒன்று புத்காம் மாவட்டத்தின் நர்பால் பகுதியில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

கற்கள் வீச்சு

இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது, கந்தர்பெல் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றினை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கற்களும், பெட்ரோல் வெடிகுண்டுகளும் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ராணுவம் உடனடியாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேபோன்று புத்காம் மாவட்டத்தின் பகர்போராவில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை சரமாரியாக வீசினர்.

கூடுதல் போலீசார்

அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்களில் 2 பேர் உயிரிழந்தார். அவர்கள் முகமது அப்பாஸ் (20), பைசன் அகமது (15) என்று போலீசார் தெரிவித்தனர். இதேபோன்று பீவார் பகுதியில் வாக்குச்சாவடி முன்பாக குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிசார் அகமது என்பவர் உயிரிழந்தார். புத்காம் மாவட்டத்தின் சதூரா பகுதியிலும் வன்முறை நடந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார்.

எல்லை பாதுகாப்பு படை

இந்த அசம்பாவிதங்களை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். மிக அதிக எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோன்று ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த விவகாரத்தில் ஆளும் பிடிபி – பாஜக கூட்டணி அரசு போதுமான பாதுகாப்பினை வழங்கவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios