ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் 5 லட்சத்து 66,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்த்திருந்த நிலையில், வெறும் ரூ. 65,000 கோடி மட்டுமே கிடைத்ததாக தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைபேசித் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப வசதிக்கான அலைக்கற்றை தொலைத்தொடர்புத்துறை மூலம் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவில் ஒரேமுறையாக 5 லட்சத்து 63,000 கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றையை விற்பனை செய்வதற்கான ஏலம் கடந்த 1ம் தேதி தொடங்கி, 5 நாட்கள் நடைபெற்றது. 

இதில் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஐடியா செல்லுலர், பார்தி ஏர்டெல், டாட்டா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஏர்செல் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன. தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. 

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 5 நாட்கள் நடைபெற்ற அலைக்கற்றை ஏலம் மூலம் 65,789 கோடி ரூபாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சேவை வரி போக மத்திய அரசுக்கு 32,000 கோடி ரூபாய் வரை முன்வைப்புத் தொகையாக கிடைக்கும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். 

தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் ஏலத்திற்கு அனுமதிக்கப்பட்ட அலைக்கற்றையில் 4ஜி உட்பட 60% அலைக்கற்றையை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. இதுவே, ஏமாற்றத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.