ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தங்களை கைது செய்ய தடை விதிக்க கோரி இருவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்ய தடை விதித்து அதை பல தடவை நீதிமன்றம் நீட்டித்தது. இந்த வழக்கு கடந்த வாரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வழக்கு மீண்டும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி முன்ஜாமீன் தரக்கூடாது என்ற சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிபிஐயின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. முன்ஜாமீன் கிடைத்ததால் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் 2 பேரையும் சிபிஐ, அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.

 

மேலும், இருவரும் வெளிநாடு செல்லக்கூடாது, ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி ஓ.பி.சைனி கூறியுள்ளார்.