காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, பசு பாதுகாப்பு குண்டர்களால் சிறுபான்மையினர், தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்.

நாடு முழுவதும் பசு குண்டர்களால் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தன. இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசி எறிந்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரை 5 நாட்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்தார்.

இந்த நிலையில்  அவை மீண்டும் தொடங்கியபோது, பசு குண்டர்கள் விவகாரத்தை எழுப்பி மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசத் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

காலை 11 மணியளவில் குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘நீங்கள் மக்களவையை சுமுகமாக நடத்த விடமாட்டீர்கள். எனவே அவையை நான் ஒத்தி வைக்கிறேன். 14-வது குடியரசு தலைவரின் பதவி ஏற்பு விழா நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கிறேன்’ என்று கூறி விட்டு அவையை ஒத்தி வைத்தார். இதன் பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி ஏற்பு விழாவுக்கு சென்றனர்.

அவை மீண்டும் தொடங்கியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, ‘பாஜக எம்.பி.க்கள் வீரேந்திர குமார், நந்த குமார் சிங் சவுகான் ஆகியோர் நான் தலித்துகளுக்கு எதிரானவன் என்று பேசியுள்ளனர். இதனை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் எனது பதவியை நான் ராஜினா செய்கிறேன். அவர்கள் கூறியது பொய் என்றால், அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று பேசினார். அவருக்கு ஆதரவாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 15 ஆண்டுகளாக தலித்துகளை ஆதரித்து குரல் கொடுத்து வருபவர் சிந்தியா என்றார்.

இதன்பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையின் மையத்திற்கு சென்று சபாநாயகருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அமளி கடுமையானபோது குறுக்கிட்ட சபாநாயகர், ‘மக்களவை அதிகாரிகள் அல்லது செயலர் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரேனும் தவறுதலாக தாக்கினாலும் கூட, பின் விளைவுகள் கடுமையாக இருக்கும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி அமளி செய்தால் மக்களவையை எவ்வாறு சுமுகமாக நடத்த முடியும்?. அவை விதிகளின்படி எதிர்க்கட்சியினர் தங்களது கோரி்க்கையை முன் வைக்க வேண்டும். அவையை எப்படி நடத்த வேண்டும் என்று அவர்கள் எனக்கு சொல்லித்தர வேண்டாம்’ என்றார். இதன்பின்னரும் அமளி தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்